டயகமவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா!

லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் இன்று (21.12.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும், அக்கரப்பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்திற்கு கடந்த 11ம் திகதி கொழும்பிலிருந்து வருகை தந்த சமய தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தரும் பொழுது கினிகத்தேனை களுகல பகுதியில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்தில் அவரின் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டது மட்டுமன்றி அப்பகுதியில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்றுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, அப்பகுதியில் உள்ள 10 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதில் கடந்த 14ம் திகதி குறித்த மத தலைவரின் உறவினர் வீட்டில் இருந்த 12 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.

ஏனைய பகுதிகளில் உள்ள தொற்றாளர்கள் கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles