10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.
ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.” – என்றார்.