” ஆட்சிக்கு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியாகவும் இருக்கின்றது. அதற்காக தனித்தும், கூட்டணியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகின்றது. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மூலம் உரிய பிரதிபலனை, உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும். நேரம்வரும்போது அதற்குரிய அறிவிப்பு வெளியிடப்படும்.
தேர்தல்மூலம்தான் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். சிலவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைபலம் ஊடாக அந்த மாற்றம் இடம்பெற்றால்? எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
இந்நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்தான். அதனால்தான் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். நெருக்கடியின்போது நாட்டை ரணில் பொறுப்பேற்று தேர்தலை நடத்தியதால்தான் இந்த ஆட்சியாளர்களால்கூட ஆட்சிக்கு வர முடிந்தது.” – என ஐ.தே.க. பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.