“323 கொள்கலன்கள் தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையை கண்டறிய வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
” மத்திய வங்கி பிணைமுறி மோசடியைவிட கொள்கலன் மோசடி பாரதூரமானது. புலிகளின் ஆயுதங்கள் கொள்கலன்களில் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் கருத்து வெளியிட்டார். எனவே, மேற்படி கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா, போதைப்பொருள் இருந்ததா, நிதி இருந்ததா என்பது பற்றி எவருக்கும் தெரியாது. அது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
323 கொள்கலன்கள் என்பது சாதாரண விடயம் அல்ல. அவற்றை வீதியில் நிறுத்தி வைத்தால் 5 கிலோ மீற்றர் தூரம் அளவுக்கு இருக்கும்.
புதிய பொலிஸ்மா அதிபர் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவாரானால், இந்த கொள்கலன் மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடி இதுதான். நிதி அமைச்சு, துறைமுகங்கள் அமைச்சு என்பன இதனுடன் தொடர்புபட்டுள்ளன. எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும்.” – என்றார்.