பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு – ஆசிர்வாதம் காரணமாகவே பாதாளக்குழுக்கள் வளர்ச்சி கண்டன. தமது அரசியல் இருப்புக்காக , அதிகாரத்துக்காக பாதாள குழுக்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர், பாதாள குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், பாதாள குழுக்களுக்கும், அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது. இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
நாட்டில் தற்போதும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் அரசியல் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பிலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. எதிர்காலத்தில் அது பற்றி தெளிவுபடுத்தப்படும்.
பாதாள குழுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் நிறுவப்படும்.” – எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
அதேவேளை, பாதாள குழுவா, அரசியல்வாதியா, அதிகாரியா, பொலிஸாரா என பாகுபாடு இல்லை. எவர் தவறிழைத்திருந்தாலும் தராதரம்பாராது நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இங்கு சட்டத்துக்கு மேலானவர்கள் என எவரும் இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை உருவாக்கப்படும்.
பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும்.” – என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.