ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக அரசியல் வாதிகள் மக்கள் விடுதலைக்காக கூட்டுக் குரல் எழுப்பாதது ஏன்?

ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக தலைவர்கள், மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக கூட்டுசேர மறுப்பது ஏன் என்று அரசியல், சிவில், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது வர்க்க அரசியலுக்காக தொழிலாளர்களை பலிகடாவாக்கும் வகையில் அரசியல் பிரமுகவர்கள் செயற்படுவது கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அருட்தந்தை மா. சத்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் வெளிநாட்டு பயணத்தின்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து – தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு மக்கள் பணத்தை சுய தேவைக்காக பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் சிறை சென்றார்.

இதனையடுத்து அவரின் விடுதலையை வலியுறுத்தி மலையக தொழிற்சங்கம் ஒன்று தமது அங்கத்தவர்களை பூஜை வழிபாட்டில் ஈடுபட வைத்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அத்துடன், தனது வர்க்க அரசியலுக்காக எம் தொழிலாளர் உறவுகளை பூசை வழிபாடு என பலிகடாவாக்கியமை கண்டறியத்திற்குரியதே.

மேலும் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாளில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மற்றுமொரு மலையக தொழிற்சங்க மற்றும் அரசியல்வாதி ஒருவர் நீதிமன்ற வளாகம் சென்றிருந்தார்.

அவரிடம் மலையக மக்களின் சம்பள விடயம் சம்பந்தமாக, மலையக அரசியல் தலைமைகளின் கூட்டு செயல்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு உரிய பதில் அளிக்க முடியாது நழுவி சென்றார். இது அரசியல் கையாலாகாத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

மலையக தொழிலாளர்களை பூசை வழிபாட்டில் ஈடுபட வைத்தும், நேரடியாக நீதிமன்ற வளாகம் சென்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த மலையக அரசியல் தலைமைகளிடம் கேட்கின்றோம், வெளிநாட்டில் செலவழித்த ரூபா 160 லட்சத்துக்கு அதிகமான பணத்தில் அன்னிய செலவாணியை ஈட்டித் தரும் மலையக உழைப்பாளர்களின் வியர்வையும் இரத்தமும் கலந்துள்ளது என நினைக்காதது ஏன்?

அதுமட்டுமல்ல ரணில் தமது சுய தேவைக்காக வெளிநாட்டில் செலவழித்த பணம் மலையக தொழிலாளி ஒருவரின் எத்தனை நாள்? எத்தனை வருட கூலி என்பதை கணக்கிட்டு பார்த்ததுண்டா? தம் வாழ்க்கையில் என்றுமே சுகபோகம் அனுபவிக்காதவர்களை, சுகபோகத்தினை கனவிலும் நினைக்காதவர்களை மக்கள் பணத்தினை கையாடிய ஒருவர் விடுதலை செய்யப்பட வேண்டும் பிரார்த்தனைக்கு தள்ளி எஜமான் விசுவாசம் காட்டியமையும் அவர்களை பலிகடா வாக்கியமையும் ஏற்கக் கூடியதல்ல.

மலையக தொழிற்சங்கங்களை, தமது பரம்பரை குடும்ப சொத்தாக்கி அரசியல் செய்யும் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் உழைப்பாளர்களின் சந்தா பணத்திற்கு முறையாக கணக்கு காட்டியதுண்டா? கணக்காளர் அறிக்கையினை அடிமட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு வழங்கியதுண்டா? அங்கும் கடந்த காலங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவே செய்திகள் வெளிவருகின்றன. இது தொடர்பில் சுயாதின ஆணைக் குழு நியமித்தால் பல உண்மைகள் வெளிவரலாம்.

தொழிலாளர் வர்க்கத்திற்கு சம்பளம் என்பது சிந்தும் வியர்வைக்கான கூலியாக மட்டும் அமைந்து விடாது. அதுவும் மலை தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது பொருளாதார சம பலத்துடன் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரம் அது. இதனை பெற்றுக் கொடுப்பதற்கு கூட்டாக செயல்படவும், கூட்டாக மக்கள் சக்தியை பலப்படுத்தவும் ரணிலுக்காக கூட்டமாக சேர்ந்த மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றினைய மறப்பது ஏன்?

மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகளே உங்கள் கடந்த காலங்கள் கசப்பானதாக இருக்கலாம். ஆனால் மலையக உழைக்கும் வர்க்கம் தங்களுடைய சந்தாவின் மூலமும் வாக்குகள் மூலமும் அதிகார நாற்காலிகளை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களே உங்கள் எஜமான் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மலைய மக்களின் இருப்பு பொருளாதாரம் அவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் அவர்கள் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் கௌரவத்தோடு வாழ வேண்டும். அதற்கான காணி உரிமையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கூட்டாக உழையுங்கள். இனமாக வளர அவர்களுக்கு தேவையான அரசியல் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். அதுவே மலையகத்தை முன்னோக்கி நகர்த்துகின்ற செயலாக அமையும். அதற்காக கூட்டு சேரும் நாளையே மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.அதுவே உங்கள் வெற்றி. மலையத்தின் வெற்றி.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles