மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் உட்பட சகல அரசியல் கட்சிகளும் வெகு விரைவில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மஹீம் இவ்வாறு வலியுறுத்தினார்.
மாகாணசபைத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டமைக்கான பொறுப்பினை நல்லாட்சி அரசாங்கமே ஏற்க வேண்டும். வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றத்திலேயே திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும். பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது திருத்தப்பட்ட கலப்பு முறைமையில் தேர்தலை நடத்துவதா என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் 2017இல் ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கோ 2019இல் ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கோ வழங்கிய ஆணையை விட தற்போதுள்ள அரசாங்கத்துக்கு அதிக பெரும்பான்மையுடனான ஆணையை வழங்கியிருக்கின்றனர்.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், பிரதமர் ஹரிணி அமரசூரியவிடமும் குறிப்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அல்லது மாகாணசபை முறைமையை நீக்கும் நிலைப்பாட்டில் இருந்தால் அதனையாவது மக்களிடம் கூறுமாறு வலியுறுத்துகின்றோம். ஒரு மாதத்துக்கு முன்னர் எமது அமைப்பினால் மாகாணசபை தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதற்கு எவ்வித பதிலும் இல்லை.
அதேவேளை அரசியல் கட்சிகளுக்கும் தாம் எதிர்க்கட்சிலிருக்கும் போது மாத்திரமே மாகாணசபைத் தேர்தல் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியமைக்கும் போது அதனை மறந்து விடுகின்றனர் என நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மஹீம் மேலும் தெரிவித்தார்.