2022 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்படி ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதில் எதிர்பார்த்தபடி 2022 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011-ம் ஆண்டில் இந்த போட்டியில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.