மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
லையக அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
200 வருட காலத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென அவர்களின் தேவையறிந்து சேவையாற்றுவதற்கென ஒரு அரச நிறுவனம் இருக்கவில்லை.
நல்லாட்சி காலத்தில் பல அமைச்சரவை பத்திரங்களை சமர்பித்து பெருந்தோட்ட பிராந்தியங்களோடு தொடர்புடைய அமைச்சுக்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் உருவக்கப்பட்ட நிறுவனமே “மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை”யாகும்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் ஜனாதிபதிக்கான கடிதம் இந்த அரசாங்கம் அதிகார சபையினை அமைச்சின் ஒரு பிரிவாக இணைப்பதற்கான முயற்சியினை உறுதி செய்கின்றது.
இந்த அதிகாரசபை சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு வந்தபோது இன்றைய ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள் என்பதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு உருவாக்கிய அதிகார சபையினை இல்லாமலாக்க நினைப்பது மலையக மக்களுக்கு செய்யும் வரலாற்று துரோகமாகும்.
மலையக மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் இந்த அரசாங்கம் உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிறுவனத்தினை இன்னும் சக்திமயப்படுத்தி அதனூடாக மலையக மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். அதைவிடுத்து அதிகார சபையினை அமைச்சின் ஒரு உப பிரிவாக கொண்டுவர நினைப்பது இவர்களின் போலி அக்கறையினை காட்டுகின்றது.
இவ்வாறான விடயம் நடக்கின்றபோது இந்த அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கும் பிரதி அமைச்சரும், மலையக பாராளுமற உறுப்பினர்களும் மௌனிகளாக இருப்பது இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மலையக மக்களுக்கு செய்யும் துரோகம்.
போராடி பெற்ற அதிகார சபையினை போராடி தக்கவைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.