” மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மௌனம் காத்துவருகின்றது. அத்துடன், நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சமாகும்.”
இவ்வாறு அரசியல், சமூக செயற்பட்டாளரான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” ஜனாதிபதி, பிரதமர் உட்பட தேசிய மக்கள் சக்தியினர், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதானிகள் மற்றும் அவர்களுக்குக் கீழ் இயங்கும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி ஓடுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனும் தமக்கான நிரந்தர அரசியல் கொட்டிலை அங்கு அமைத்துக் கொண்டுள்ளார்.
எனினும், இவர்களை நம்பி வாக்களித்த மலையக மக்களை இவர்கள் கனவில்கூட நினைத்து பார்க்காமல் இருப்பது ஏன்? மறுபுறத்தில் இவர்கள் கிழக்கையும் மறந்துள்ளனர். இதுவெல்லாம் சிங்கள பௌத்த அரசியலின் மறைமுக வேலைத்திட்டமே.
மலையக மக்கள், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்களுக்கு அளித்த வாக்குகளுக்கான அரசியல், பொருளாதார, சமூக கௌரவம் இந்த ஆட்சியில் கிடைக்குமா?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1, 700 ரூபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அது எப்போது கிடைக்கும் எனக் கூறப்படுவதில்லை.
1, 700 ரூபா என்பது கடந்த ஆட்சியாளர்கள் தீர்மானம். எனவே, மலையக மக்கள் நாளொன்றுக்கு 2000 ரூபாவுக்கு மேல் சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர். இதனை பெற்றுக் கொடுப்பதற்கு எவரும் இதுவரைக்கும் முன்வரவில்லை.
உழைப்பிற்கான ஊதியம் என்பது வாழ்விற்கான ஊதியமாக இருத்தல் வேண்டும். ஆனால் மலையக உழைக்கும் சமூகத்திற்கு தொடர்ந்து வாழ்வுக்கேற்ற ஊதியத்தை பெற்றுக் கொடுக்காது வறுமை கோட்டுக்குக் கீழ் வைத்திருப்பதை இனச்சுத்திகரிப்பு, இன அழிப்பு, இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.
தற்போது மலையகத்தில் நேரடி போர் இன்றி மறைமுக யுத்தம் நடைபெறுகின்றது என்பதன் அடையாளமே வறுமைக்குள் அவர்களை தள்ளுவதும் போசாக்கின்மைக்குள் வைத்திருப்பதுமாகும். இந்நிலையில் தாமாகவே பூமியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கான செயலுமாகவும் நாம் கருதுகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் மலையகத்தில் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத 37,000 ஹெக்டேயர் காணிகள் இருப்பதாகவும் அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டதை நாம் அறிவோம். அதனை நிறைவேற்றுவதற்கு எந்த விதமான முயற்சி செய்யும் எடுக்கவில்லை.
நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்த நிமல் சிறிபாடில சில்வா , அக்காணிகள் தொடர்பில் ஆய்வு செய்வதாக தெரிவித்திருந்தாலும், அதுவும் நடக்கவில்லை.
தற்போதைய ஆட்சியாளர்களும் வெற்று காணிகள் மற்றும் நட்டமடைவதாக கூறப்படும் தோட்டங்கள் இலாபமீட்டும் வேறு கம்பணிகளுக்கு கொடுகப்படும் எனக் கூறுகின்றனரே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவடைய மலையக சமூகத்திற்கு கொடுப்பது பற்றி வாய் திறக்காதுள்ளனர். இவையெல்லாம் பேரினவாத நோக்கம் கொண்ட அரசியல் என்பதை அறிவோம்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நவீன மயமாக்கப்படும். வடக்கில் மண்டை தீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம், கச்சத்தீவில் சுற்றுலா தளம் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 200 வருட காலமாக அனைத்து வகையிலும் பின்தள்ளப்பட்ட மலையக மக்கள் வாழ் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் அமைதி காப்பதோடு கடந்த ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சம் எனவும் கூறலாம்.
மலையக அரசியல் தலைமைத்துவங்கள் , தமது கட்சி அரசியலுக்காக மட்டும் அரசியல் செய்வதையும், அதற்கு தொழிற்சங்கங்களை பாவிப்பதையும் நிறுத்த வேண்டும். கூட்டு அரசியல் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே மலையகத்தின் எதிர்காலத்தை கௌரவமுள்ளதாக்கும்.” – என்றார்.