4.3 ஓவர்களில் இலக்கை எட்டி அமீரகத்தை எளிதில் வென்ற இந்தியா

 

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி இந்தியா அசத்தியது.

‘ஆசிய கோப்பை – 2025’ தொடர் முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.

மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் குரூப்-ஏ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங் காங் உள்ளிட்ட அணிகள் குரூப்-பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் அதன் முதல் லீக் ஆட்டத்தில் புதன்கிழமை அன்று விளையாடின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர் இந்திய பவுலர்கள். குல்தீப் யாதவ் 4, ஷிவம் துபே 3 மற்றும் பும்ரா, அக்சர், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. அபிஷேக் சர்மா உடன் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தார். அபிஷேக், 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில், 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 4.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவ் வென்றார்.

Related Articles

Latest Articles