ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் இரவு 8 மணிக்கு துபாயில் மோதுகின்றன.
சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது தனது பிரிவில் முதலிடம் பிடித்து இருந்தது. வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஹாங் காங் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.
இலங்கை அணி 3 ஆட்டங்களிலுமே இலக்கை துரத்தியே வெற்றி கண்டுள்ளது. இதனால் நாணயச்சுழற்சியில் வெல்லும் பட்சத்தில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சில் நூவான் துஷார, துஷ்மந்த சமீர ஆகியோர் தொடக்க ஓவர்களிலும், வனிந்து ஹசரங்க, அசலங்க, தசன் ஷனக ஆகியோர் நடு ஓவர்களிலும் பலம் சேர்க்கக்கூடும்.
வங்கதேச அணியானது சூப்பர் 4 சுற்று வாய்ப்பை இலங்கை அணியின் தயவால் பெற்றது. இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதன் காரணமாகவே வங்கதேச அணி சூப்பர் சுற்றில் நுழைந்தது. ஒருவேளை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தால் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கும்.










