ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலை ஊழியர் சங்கம் போராட்டம்!

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காண வேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்ற போதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்துக்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் வழங்கப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழகப் பேரவைக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், இதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles