மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் 10 அற்புத தருணங்களை சற்று பார்ப்போம்.
இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என அனைவரும் புதிய உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பில்லியன் கண்களின் கனாவை பல சவால்களை கடந்து சாதித்துள்ளனர் இந்திய அணி வீராங்கனைகள்.
முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்து 1997 மற்றும் 2000-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி, பின்னர் 2005 மற்றும் 2017 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் இருந்தது இந்தியா. இந்நிலையில், இந்த முறை உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று காட்டியுள்ளது.
8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதற்கடுத்து தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி உடனான மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணி மீது வைக்கப்பட்ட விமர்சனம் மோசமாக இருந்தது. இதில் இங்கிலாந்து அணி உடன் 4 ரன்களில் தோல்வியை தழுவி இருந்தது.
இந்தச் சூழலில் கட்டாய வெற்றி என்று நெருக்கடி நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற்று, அரையிறுதிக்கு 4-வது அணியாக தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வெற்றியில் இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த வீராங்கனைகள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது. இதில் ஆடும் லெவனில் இடம்பிடித்தவர்கள், பயிற்சியாளர் குழு, களத்தில் அணி நிர்வாகம் சொன்ன தூதுகளை கடத்திய இதர வீராங்கனைகள் என அனைவரது உழைப்பும் உள்ளது. மீண்டெழுதலுக்கு (Resilience) சிறந்தவொரு உதாரணமாக திகழ்கிறது இந்தியா.
தேசம் இந்தியாவின் வெற்றியை கொண்டாடுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் மகளிர் உலகக் கோப்பை தொடர் பல கோடி மக்களின் கவனத்தை பெற்றது இந்தியாவின் அரையிறுதி வெற்றிக்கு பிறகுதான். இனி இந்திய மகளிர் அணி மீதான கவனமும், மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வமும் பன்மடங்கு பெருகும்.
உலக கோப்பை தொடரில் இந்தியாவின் சிறப்பான டாப் 10 மேஜிக் தருணங்கள்…
ஜெமிமாவின் சதம்: இந்தத் தொடரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக விளையாடி வந்தார். முதல் நான்கு ஆட்டங்களில் இரண்டு முறை டக் அவுட் ஆனார். மற்ற இரண்டு ஆட்டங்களில் 32 மற்றும் 33 ரன்களை எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து உடனான ஆட்டத்தில் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன் பின்னர் நியூஸிலாந்து அணி உடனான ஆட்டத்தில் 3-ம் இடத்தில் இறங்கி 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.
நெருக்கடி நிறைந்த அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் 339 ரன்கள் டார்கெட்டை இந்தியா வெற்றிகரமாக கடக்க ஜெமிமாவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. இறுதிவரை களத்தில் இருந்த அவர், சதம் விளாசி, ‘இந்தியா இறுதிக்கு முன்னேறியது’ என்ற இனிதான முடிவுரையுடன் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றார்.
அமன்ஜோத் கவுரின் அற்புத கேட்ச்: தென் ஆப்பிரிக்க அணி உடனான வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய வீராங்கனைகளில் அமன்ஜோத் கவுரும் ஒருவர். அவர் 51 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க இணையை ரன் அவுட் செய்து பிரித்தார். பீல்டிங்கில் பந்தை பற்றியதும் ஸ்டம்புகளை நோக்கி எறிந்து கணநேரத்தில் அதை தகர்த்தார். அது இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்று கொடுத்தது.
சதம் கடந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அளித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாராவை கேட்ச் பிடித்து வெளியேற்றினார். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அந்த கேட்ச்சை தட்டி தட்டி பிடித்தார் அமன்ஜோத். அப்போது, ரசிகர்களின் ஹார்ட் பீட் எகிறி, பின்னர் இன்ப அதிர்ச்சியில் திளைத்தது.
ஸ்மிருதி மந்தனா: இந்திய அணியின் ரன் மெஷினான ஸ்மிருதி மந்தனா, இந்தத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 434 ரன்கள் எடுத்து அசத்தினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி உடனான ஆட்டத்தில் அரை சதம் கடந்தார்.
நியூஸிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 109 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் இந்தியா அதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ‘இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன்’ என்று அந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்மிருதி தெரிவித்தார். இறுதிப் போட்டியில் ஷெஃபாலி உடன் சத கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.
கிராந்தி கவுட்: இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டில் பிராதான அங்கம் வகித்தவர் கிராந்தி கவுட். இந்தத் தொடரில் 8 ஆட்டங்களில் 378 பந்துகள் வீசி 361 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தனது ஆட்டத்தை பெரிய திரையில் பார்த்து தன் ஊர் மக்கள் மகிழ்வார்கள் என அந்த போட்டியின் போது அவர் தெரிவித்திருந்தார்.
பிரதிகா ராவலின் மாயம்: இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகளில் ஒருவரான பிரதிகா ராவல் 7 ஆட்டங்களில் விளையாடி 308 ரன்கள் எடுத்தார். லீக் சுற்றில் நியூஸிலாந்து அணி உடனான வாழ்வா சாவா ஆட்டத்தில் 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுடன் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
துரதிர்ஷ்டவசமாக வங்கதேச அணி உடனான ஆட்டத்தில் ஃபீல்ட் செய்தபோது காலில் காயமடைந்தார். அதனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு ஆளானார். இந்தத் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதும் சக்கர நாற்காலியில் மைதானம் வந்து வெற்றியை கொண்டாடினார். 2 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் அவர் கைப்பற்றி உள்ளார்.
ஃபைனலில் ஷெஃபாலி வர்மாவின் அதிரடி: பிரதிகா ராவலுக்கு மாற்றாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் இளம் வீராங்கனையான ஷெஃபாலி. அரையிறுதியில் அவர் ஏமாற்றிய நிலையில், இறுதிப் போட்டியில் 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.
இதே ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை அவர் வென்றார். கடந்த 2023 இளையோர் டி20 உலகக் கோப்பையை வென்றபோது சீனியர் அணியுடன் இதே வெற்றியை பதிவு செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். இப்போது உலகக் கோப்பையை சொன்னபடி வென்றுள்ளார்.
ரிச்சா கோஷின் கேமியோ: இந்திய அணியின் ரிச்சா கோஷ் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தத் தொடரில் 8 ஆட்டங்களில் 235 ரன்கள் எடுத்தார். அதில் 12 சிக்ஸர்களை அவர் விளாசி உள்ளார். இந்த சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்டர்களில் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி உடனான இறுதி ஆட்டத்தில் 24 பந்துகளில் 34 ரன்கள் விளாசி இருந்தார்.
தீப்தி சர்மாவின் ஆல் ரவுண்ட் பர்ஃபாமென்ஸ்: இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸில் 215 ரன்கள் எடுத்துள்ளார் தீப்தி சர்மா. இதில் 3 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். 9 ஆட்டங்களில் மொத்தம் 81.2 ஓவர்கள் வீசி 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராக அறியப்படுகிறார். இறுதிப் போட்டியில் அரை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். தொடர் நாயகி விருதையும் அவர் வென்றார்.
வரலாற்று ரன் விரட்டல்: அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இந்தத் தொடரில் அந்த ஆட்டம் இந்தியாவின் கோப்பை வேட்கைக்கு சரியான வேட்டையாக இருந்தது. அதில் ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோரின் ஆட்டம் ‘எங்களுக்கு வேர்ல்ட் கப் ரொம்ப முக்கியம்’ என எதிரணிக்கு சொல்வது போல இருந்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத்: இந்தத் தொடரில் இந்திய அணியின் துல்லிய செயல்பாட்டை கட்டமைத்தவர்களில் ஒருவர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இந்திய அணியின் தலைமகள். ஆடும் லெவனில் மாற்றம், வீராங்கனைகளின் காயம், அதற்கான ரீபிளேஸ்மென்ட்கள், ஆட்டத்தின் தருணத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடி என அனைத்தையும் திறம்பட செய்து வெற்றி கண்டார் ஹர்மன். இந்தத் தொடரில் 8 இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களை எடுத்துள்ளார். அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதியில் 89 ரன்கள் எடுத்திருந்தார்.
இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான அந்தக் கடைசி விக்கெட்டுக்கான கேட்ச்சை ஓடிய படி பிடித்து அசத்தினார் ஹர்மன். அந்த வெற்றி தருணம் கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கும் நிற்கும். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அற்புதமானதாக அமைந்தது.










