எதிர்க்கட்சியினர் காட்டுச் செடிகளாகவும், ஆளும் கட்சியினர் தங்கச் செடிகளாகவும் இப்போது காணப்பட்டாலும் இன்னும் சிறிது காலத்தில் ஆளும் கட்சியினர் காட்டுச் செடிகளாகி, எதிர்க்கட்சியினர் தங்கச் செடிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி சாமர சம்பத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே சாமர சம்பத் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”முழு நாடும் ஒன்றாக என்று போதைப் பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் பேலியகொட மாநகர சபை உறுப்பினரின் கணவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை ஒரு மாதத்திற்கு முன்னர் தெஹிவளை- கல்கிசை நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலைமையில் போதைப் பொருள் குற்றவாளிகளின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இப்போதுதான் அவருக்கு அது தெரிகின்றதா? இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து செவ்வந்தி உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலை சேர்ந்தவர்களை அழைத்து வரும் போது புகைப்படங்களை வெளியிட்டு பொலிஸாரே பிரசாரங்களை செய்தனர். அதன் பின்னரே பொலிஸ் மா அதிபருக்கு இப்போது அது நினைவுக்கு வந்துள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ள நிறுவனமாக ஶ்ரீ லங்கன் விமான சேவை உள்ளது. அதற்காக ரூ. 20,000 மில்லியன் வழங்கப்பட்டது. இப்படி நிதி வழங்கினால் அது முன்னேற்றம் காணாமல் இருக்குமா? நாட்டில் 14500 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு வழங்கிய பணத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ரூ. 17 இலட்சம் என்ற அடிப்படையில் நிதியை வழங்கியிருக்கலாம். அதேவேளை பிணையின்றி கடன் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் எவருக்காவது பிணையின்றி கடன் கிடைத்துள்ளதா? என பார்த்தால் அப்படிக் கிடைக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையை சேர்ந்தவர். அவர் அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளார். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்துள்ளார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பை அபிவிருத்தி செய்துள்ளார்.
நீங்கள் நாளுக்கு நாள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும். உங்களுக்கு அதிகளவில் மக்கள் வாக்களித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கில் மக்கள் வாக்குகளை வழங்கினர். நீங்கள் அந்த சாதனைகளை உடைத்துக்கொள்ள வேண்டாம். நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் உங்களை போன்று சாதனை வாக்குகளைப் பெற்றனர். இப்போது வீட்டில் இருக்கின்றார். இதுபோன்ற நிலைமை உங்களுக்கு வரும். இப்போது நாங்கள் காட்டுச் செடிகள், நீங்கள் தங்கச் செடிகள். ஆனால் இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் காட்டுச் செடிகளாகி, நாங்கள் தங்கச் செடிகளாகிவிடுவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.










