தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். அந்த தொகையை பெற்றுக்கொள்ள 25 நாட்கள் வேலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தின் போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். பெருந்தோட்ட முதலாளிமார்கள் 200 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் 200 ரூபாவை வருகை கொடுப்பனவான வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. வருகையை ஊக்குவிக்கவே அரசாங்கம் அந்த தொகையை கொடுக்க தீர்மானித்துள்ளது.
குறைந்தது 15 நாட்களாவது வருகை தந்தால் 200 ரூபாவை கொடுக்குமாறே முதலாளிமார்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு கூறவில்லை. நாளொன்றுக்கு வேலைக்கு வந்தால் 200 ரூபா வழங்குவதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம். 14 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு குறைந்தது 8 நாட்களாவது வேலை வழங்கப்பட வேண்டும். அத்துடன் 25 நாட்களும் வேலையை வழங்குங்கள். அவர்கள் ஒரு நாள் வந்தாலும் 200 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிபந்தனையாகும் என்றார்.
