2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்துவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார்.
இந்த திட்டத்தின் படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.200 சம்பள உயர்வு மற்றும் வருகை ஊக்கத்தொகை ரூ.200 வழங்கப்பட உள்ளது. இதனால், தற்போது ரூ.1350 ஆக வழங்கப்படும் நாட்சம்பளம் ரூ.1750 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இது வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக உயர்ந்துள்ளது. எந்த தொழிற்சங்க அழுத்தமும் அரசியல் பேதங்களும் இல்லாமல், பொறுப்பான பேச்சுவார்த்தை மற்றும் நேர்மையான அணுகுமுறையின் மூலம் இது எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வரவு செலவு உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும் பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார். தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இந்த முயற்சியை பாராட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல தசாப்தங்களாக நீடித்த கட்டுப்பாட்டு வேலை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் எங்கள் குரலுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. தொழிலாளர்களை எதிர்காலத்தில் தேயிலை பங்குதார்களாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் திட்டம் தான் நிலையான தீர்வாகும்.
2020–2024 காலப்பகுதியில் தேயிலைத் துறையின் வெளிநாட்டு வருமானம்:2020 – ரூ.230 பில்லியன் 2021 – ரூ.268 பில்லியன் 2022 – ரூ.411 பில்லியன்
2023 – ரூ.428 பில்லியன் 2024 – ரூ.450 பில்லியனை மீறும் என எதிர்பார்ப்பு 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலைத் துறையின் முதுகெலும்பாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்கள் தனித்து தொழிலாளர்கள் கண்ணோட்டத்தில் பிரிக்கப்படக்கூடாது.
மலையகத் தமிழர்களின் வீட்டு மற்றும் வாழ்வாதார நில உரிமைகள், புதிய கிராம சேவக பிரிவுகள், பிரதேச அலுவலகங்கள், பிரதேச சபைகள், கல்வி, சுகாதார சமத்துவம், அரசு வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய பல கோரிக்கைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
சில பெருந்தோட்ட நிறுவனங்கள் மாதத்தில் 10–15 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் சூழலில், 25 நாட்கள் பணிக்கு சென்றால் மாத்திரமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்கிற கேள்வியை பரத் அருள்சாமி முன்வைத்தார். தொழில் அமைச்சின் பிராந்திய அலுவலகங்கள் பல ஆண்டுகளாக சரியான கண்காணிப்பு அல்லது தீர்வுகளை வழங்காததையும் அவர் கண்டனமாகக் கூறினார்.
மேலும், அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட பரிசீலனை குழுவில் பெருந்தோட்டத் துறைக்கு நிபுணர் இல்லாதது மிகப் பெரிய குறைபாடு என அவர் சுட்டிக்காட்டினார். சில எதிர்க்கட்சியினர் தொழிலாளர்களை தாழ்வாகக் காட்டும் வகையில் “லஞ்சம்” போன்ற சொற்களை பயன்படுத்துவதை அவர் கடுமையாக கண்டித்தார். இதனை எதிர்கட்சி தலைவர் கவனத்திற்கு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி எப்போதும் சமூக நலனையே முன்னிலையில் வைத்து செயல்படும் என்றும், நல்ல முயற்சிகளை ஆதரிப்பதோடு, தவறுகள் இருப்பின் அரசை பொறுப்புக்கூறச் செய்வோம் என்றும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.










