“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையே அதிகளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனது சகாக்கள் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஊடக அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.”
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்தி வித்யாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று விடுத்த அறிவிப்புக்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ நபரொருவருக்கு உணவளிப்பதற்கு முற்பட்டால் அந்த உணவில் மண்போட முற்படாதீர். விஷம் கலக்க வேண்டாம். ஏனெனில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எல்லாத வித துன்பங்களையும் அனுபவித்துவிட்டனர். 200 வருடங்கள் கடந்தும் அம்மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது நிவர்த்தி செய்யப்படும் என ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்.
பெருமளவு சம்பளத்தை வழங்கிவிட்டோம் என நாம் நினைக்கவில்லை. ஆனால் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது அதிக தொகையாகும்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கூலி வேலை செய்யும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. உணவும் வழங்கப்படும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உணவுகூட நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அவர்களுக்கு சொற்ப அளவு சம்பள அதிகரிப்பையும் எதிர்த்தது ஏற்புடையது அல்ல எனவும் அமைச்சர் கூறினார்.
