ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் டில்லி பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் முதல் வாரமளவில் அவர் டில்லி செல்லக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எனவே, பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னரே ரில்வின் சில்வா இந்தியா பறக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.
ரில்வின் சில்வாவுடன் ஜே.வி.பியின் உயர்மட்ட பிரமுகர்கள் சிலரும் செல்லவுள்ளனர் எனவும், இந்தியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழு கடந்த மாதம் சீனா சென்றிருந்தது. இந்நிலையிலேயே டில்லியும் அழைத்துள்ளது.
1987 காலப்பகுதியில் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி.போராடியது. இதில் ரில்வின் சில்வாவும் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் அவரை டில்லி அழைத்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
