மீள் நிகழாமையை உறுதிப்படுத்த அரசியல் தீர்வு வேண்டும்!

“இறுதிக்கப்பட்டப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பரிகாரம் வேண்டும். மீள் நிகழாமை உறுதிப்படுத்த நீதியான அரசியல் தீர்வு வேண்டும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ வெள்ளையர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறும்போது ஆசியாவில் பொருளாதாரத்தில் நாம் மூன்றாவது இடத்தில் இருந்தோம். ஆனால் 76 ஆண்டுகளில் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றது. இந்நிலையில்தான் தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுள்ளது.

இனவாத ஆட்சியாளர்களால்தான் இந்நாட்டில் இனப்பிரச்சினை உருவாக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது மிகவும் பயங்கரமான சட்டமாக அமைந்தது. அச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. அச்சட்டத்தின்கீழ் ஜே.வி.பி. தோழர்களும் இச்சட்டம் ஊடாக வஞ்சிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம். வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போர் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பொறுப்பு கூறல் வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். நீதி பரிகாரம் வழங்கப்பட வேண்டும்;. மீள் நிகழாமையை உறுதிப்படுத்த இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காணப்பட வேண்டும்.” என்றார்.

Related Articles

Latest Articles