ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி பயணிக்கின்றது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் உப தலைவர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
இரு தரப்பு இணைப்புக்கு சஜித் பிரேமதாச ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்நிலையில் ரணிலின் விருப்பத்தையும் இவர்கள் இச்சந்திப்பின்போது வெளிப்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு கட்சிகளும் தனிக்கட்சியாக மாறுவதா அல்லது கூட்டணியாக செயல்படுவதா என்பது பற்றி இறுதி முடிவு விரைவில் எட்டப்படவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நேரடி சந்திப்பின்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பதற்குரிய விருப்பத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு தலைமைப்பதவி வழங்கப்படும்பட்சத்தில் சில நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கக்கூடும் என தெரியவருகின்றது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த – தற்போது அரசியல் ரீதியில் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களை ஐதேகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரப்படலாம்.
பிரமித்த பண்டார தென்னகோன, செயான் சேமிசிங்க மற்றும் மேலும் சிலரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
