தடைகளை தகர்த்தெறிந்து முன்னோக்கி செல்வோம்: அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

“ நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேலனை மற்றும் மானிப்பாய் பகுதிகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது.

பொருளாதார ரீதியில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன. இவ்வாறு பேரழிவு ஏற்பட்டிருந்த நிலையிலும் சிலர் அரசியல் நடத்துவதற்கே முற்பட்டனர்.

இலங்கையால் இனி மீண்டெழ முடியாது, இந்த அரசாங்கத்தால் அப்பணியை செய்ய முடியாது என கோஷம் எழுப்பினர்.

அரசாங்க இயந்திரம்கூட மந்த கதியிலேயே இயங்குகின்றது. எனவே , மீண்டெழுவது சாத்தியமில்லாத விடயம் எனவும் கருத்துகளை பரப்பினர்.

ஆனால் எமது நாட்டு அரசாங்க ஊழியர்களும், மக்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தனர்.

முழு நாடும் ஒன்றிணைந்து உதவி திட்டங்களை முன்னெடுத்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டினார்கள். உலக நாடுகளும் துணை நின்றன.

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள், அதற்காகவே நாம் பிரார்த்திக்கின்றோம். ஆனால் தை பிறந்தாலும் மக்களுக்கு வழி பிறக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் தை பிறப்பதையும், இந்நாட்டுக்கு வழி பிறப்பதையும் அந்த அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களின் சூழ்சிகள் எல்லாம் தோற்கடிக்கப்படும்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றிணையும் பட்சத்திலேயே மீட்சி என்பது சாத்தியம். பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது.” – என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles