விசாரணை ஒரு மாதத்துக்குள் நிறைவு: ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று, சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, லண்டனுக்கு சென்றதன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் பிணையை ரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் தரப்பில் கோரப்பட்ட போதும், முன்னைய நீதிவான் முன்னர் பிறப்பித்த பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என்று நீதிவான் நெத்திகுமார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தின் இரண்டு நரம்புகள் அடைபட்டுள்ளதாகவும், மாற்று வழியின் மூலம் இரத்த ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் அவரது சட்டவாளர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த போதும், கொழும்பு தேசிய மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் “போரிஸ் ஜான்சன்” புத்தகத்தைப் படித்துக் கொண்டே நேரத்தைச் செலவிட்டார் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், இந்த சந்தேகநபர் சட்டவிரோதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் கோரிக்கை இல்லாமல் தேசிய மருத்துவமனையின் மருத்துவக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

பிரித்தானியாவுக்கான தூதுவர் சரோஜா சிறிசேன மற்றும் 13 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் குழு, லண்டன் சென்றது.

இந்த அறிக்கைகள் அனைத்தும் அவரது லண்டன் பயணம் ஒரு தனிப்பட்ட பயணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அது ஒரு அரசுமுறைப் பயணம் என்றால், பிரித்தானிய அரசாங்கத்தின் தலையீடு இருக்க வேண்டும்.

லண்டனில் உள்ள தூதரக அதிகாரிகள், வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ கடிதமும் கிடைக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளனர் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு சட்டவாளரான, திலக் மாரப்பன, அழைப்பிதழ் உண்மையானதாக போலியானதா என்பதை உறுதிப்படுத்த, பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து அறிக்கையைப் பெறாமல், தூதரக அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதால் ஆவணத்தின் நம்பகத்தன்மையை கண்டறிய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 29 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த வழக்குத் தொடர்பாக இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles