” 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மலையக மக்கள் விடயத்தில் ஹட்டன் ட்டன் பிரகடனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தனது பிரகடனத்தின் பிரதான உள்ளடக்கத்தை மறந்த நிலையில் அபிவிருத்தி சபையையும் இயங்கா நிலையில் மட்டுமல்ல அதனை நிரந்தரமாகவே அகற்றி விடுவதற்கும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதற்கு சாவு மணி அடிப்பதற்கும் வழி தேடியதை நாம் அறிவோம்.”
– இவ்வாறு மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு?
“டித்வா புயலால் அழிந்த மற்றும் சேதமடைந்த வழிபாட்டு தலங்களை மீள கட்டமைக்கும் பணியின் அங்குராப்பண கூட்டம் கம்பளை தெரகல போதிருக்காராமை விகாரையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க “நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலம் பொருந்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவேன்” என்றார்.
இவர் உருவாக்குவதாக கூறும் சபை மலையக மக்கள் என நாம் அடையாளப்படுத்தும் இந்நாட்டில் 200 வருட வரலாற்று வாழ்வை தமதாக்கி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதுகெலும்பாகி உழைத்து வரும் மக்கள் சார்ந்ததா? அல்லது மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பின்னணியில் அதிகார சபையா?
சிங்கள பௌத்தத்தை மையப்படுத்திய அதிகார சபையா? என மலையக சமூக ஆய்வு மையம் கேள்வி எழுப்பதோடு இது தொடர்பில் மலையக அரசியல் செயற்பாட்டாளர்களும், சிவில் சமூகத்தினரும் விழிப்பாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.
கடந்த கால ஆட்சியாளர்கள் அனைவரும் மலையக மக்களை உழைப்பின் வர்க்கமாக மட்டும் பார்த்து அவர்களை ஒடுக்கி பின்தங்கிய வாழ்வு நிலைக்குள் தள்ளி, தேசிய வருமானத்தை அதிகரிப்பதிலும் அவர்களின் உழைப்பை கொள்ளையடிப்பதிலும் முழுக்கவனத்தையும் செலுத்தினர்.
சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமைகள் மலையகத் தமிழ் சமூகம் எழுவதற்கு இடமளிக்கவில்லை. எனினும் சுய முயற்சியால் கல்வி, அரச தொழில், வர்த்தகம்… போன்ற துறைகளில் மலையகத்தில் முன்னேரிய வரலாறும் உண்டு.
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் இம் மக்கள் சமூகத்தின் கௌரவம் மிகுந்த சமூக பாதுகாப்பு அபிவிருத்தி வளர்ச்சிக் கருதி உருவாக்கப்பட்டதே பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை. ஆனால் கடந்த காலங்களில் அது இயங்கும் நிலையில் வைக்கப்படவில்லை. அதற்கு நாட்டின் அரசியல், பொருளாதார, காரணிகளும் இடம் கொடுக்கவில்லை எனலாம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் மலையக மக்கள் விடயத்தில் ஹற்றன் பிரகடனத்தை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி தனது பிரகடனத்தின் பிரதான உள்ளடக்கத்தை மறந்த நிலையில் அபிவிருத்தி சபையையும் இயங்கா நிலையில் மட்டுமல்ல அதனை நிரந்தரமாகவே அகற்றி விடுவதற்கும்; பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதற்கு சாவு மணி அடிப்பதற்கும் வழி தேடியதை நாம் அறிவோம்.
தற்போது தனி கட்சியின் ஆட்சியை பலப்படுத்தும் நோக்கில் காய் நகர்த்தும் தேசிய மக்கள் சக்தி, அரச கட்டமைப்புக்களை அசைக்கும் சக்தி மிகுந்த பிரஜாசக்தி குழுக்களை கிராமங்களில் அமைத்து வருவதோடு டித்வா புயலைத் தொடர்ந்து “நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலம் பொருத்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவேன்” என ஜனாதிபதி கூறியதை சந்தேகக் கண்கொண்டே பார்க்கத் தூண்டுகின்றது.
ஏனெனில் இந்த அதிகார சபை உண்மையில் பின் தள்ளப்பட்டுள்ள மலையக மக்களின் வாழ்வியல் அபிவிருத்தி சார்ந்த அதிகார சபையா? இல்லை சிங்கள பௌத்த கருத்தியலை மையப்படுத்தி அதனை விரிவாக்கம் செயற்பாட்டுக்கான அதிகார சபையா? என எம்மை சிந்திக்க வைக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அதிகார சபை தமிழர்களின் பூர்வீக காணிகளை பறிப்பதும், தொல்லியல் திணக்கமும், படையினரும், சிங்கள பௌத்த பேரினவாத பிக்குகள் நேரடியாகவே களத்தில் நின்று அதற்கு துணை புரிவதையும் நாம் அறிவோம். தனியார் காணிகளையும் அவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்பதையும் ஆதிக்க மனநிலையின் உச்சமாக தையிட்டியில் தனியார் காணிகளைப் பறித்து விகாரை கட்டியுள்ளதையும் நாம் அறிவோம்.
மலையகத்தில் படையினரின் பங்களிப்பின்றி அல்லது தேவையெனில் அவர்களின் துணையோடு மகாவலி அதிகார சபை வடக்கு கிழக்கில் செயல்படுவதைப் போன்று மலையத்திலும் இயங்குவதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி பலம் பொருந்திய மலைநாட்டு அதிகார சபையை உருவாக்குவதாக நினைக்கத் தோன்றுகின்றது.
அவர்களின் பார்வையிலே மலையகம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய விரிந்த பூமி பிரதேசத்தையாகும். அதனை அவர்களின் அரசியல் நோக்கோடு பார்த்தே செயல்படுவார்கள் என்பது தெளிவு. அதிகார சபை தொடர்பான கருத்தினை விகாரையில் வைத்து கூறுவதன் உள்நோக்கம் எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
ஜனாதிபதியின் தற்போதைய கூற்றுப்படி 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக மக்களுக்கான அபிவிருத்தி சபை காணமலாக்கப்பட்டுவிடும் என்பது உறுதி. புதிதாக உருவாக்குவதாக கூறும் நினைத்துப் பார்க்க முடியாத பலம் பொருந்திய மலையக சபை தொடர்பான கருத்தாடல் நாடாளுமன்றத்தில் வரும்போது மலையக அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதோடு; மலையக அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கைகோர்த்து நின்றால் மட்டுமே தற்போது காணி தொடர்பான கருத்தாடலை பலமடை செய்யலாம். இல்லையெனில் அது எமது நிரந்தர கனவாகவே அமைந்து விடும் அபாயம் உள்ளது என்பதையும் மலையக சமூக ஆய்வு மையம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
