” கிவுல் ஓயா திட்டம் மூலம் வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இந்தத் திட்டம் அமையவுள்ளது.
அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, பாரிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளோம்.
அதன் அடிப்படையில், இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.
எனவே, எமது எதிர்காலத்தைச் சிந்தித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறினார்.










