ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, தனது அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது:-
“அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி தம்பதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாரிய கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்றும், இது ஒரு தனிப்பட்ட ரீதியிலான சம்பவம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
அமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருக்கு அரசு வழங்கும் ஒரு ‘பச்சைக்கொடி’ போன்றதாகும்.
பட்டப்பகலில் மக்கள் நடமாடும் வீதிகளில் அரங்கேற்றப்படும் கொலைகளை, ‘இயற்கையான நிகழ்வுகள்’ எனக்கூறி நியாயப்படுத்த அரசு முயல்கின்றதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம்.” – என்றார்.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், நடப்பு ஆண்டின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டார். இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள அரசு, மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் தெரிவித்தார்.
