2026 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 200 ரூபா வரவுக் கொடுப்பனவும், தொழில் வழங்குநர்கள் உடன்பட்ட 200 ரூபாவும் சேர்த்து, மொத்தமாக 1,750 ரூபா சம்பளம் கிடைக்கப் பெறாமை தங்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட, தனியார் மற்றும் சிறு தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுடன் ஐபென் நிறுவனம் இணைந்து இணைந்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, தொழில் ஆணையாளர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் மேலதிக செயலாளருக்கும் குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் படி தமக்கு சம்பளம் வழங்கப்படாமைக்கான காரணமாக பின்வரும் விடயங்கள் தங்களது முறைப்பாடுகள் ஊடாக குறிப்பிட்டனர்:
* பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் (கைக்காசு) எனவும்,
* தாம் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்ட கம்பனி தோட்டங்கள் அல்ல எனவும்,
* ஒரு நாளுக்கு 25–30 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் எனவும்,
* 25 கிலோ பறிக்க முடியாதவர்களுக்கு அரை நாள் சம்பளம் (ரூ. 675) மட்டுமே வழங்கப்படும் எனவும்,
* பல தோட்டங்களில் இறப்பர் பால் அளவு 20 லீற்றருக்கு குறைவாகவோ அல்லது 4–5 கிலோவுக்கு குறைவாகவோ இருக்கக் கூடாது எனவும்,
கூறி இதுவரை பெற வேண்டிய சம்பளமும் வழங்கப்படாத நிலை தொடர்ந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்:
எமது வாழ்வாதாரம் முழுமையாக தினசரி சம்பளத்திலேயே தங்கியுள்ளதால், எமது உரிமைகள் குறித்து பரிசீலித்து, அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொதுவான சம்பள உயர்வை ஏற்படுத்திக் கொள்ளவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட 1,750 ரூபா சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகளாக நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, நீதி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தோட்ட மனித மேம்பாட்டு நிதியம் ஆகிய அரச நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.










