“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!

“மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.”

இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது.

நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், “நாம் நீலகாமம்” குழுவினரால் கொழும்பில் 5 ஆம் திகதி நடத்தவுள்ள அறவழிப் போராட்டத்தை ஆதரித்தும் பிடிதளராதே அமைப்பு இன்று (27.04.2026) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“மலையக தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக பிடிதளராதே அமைப்பு ஜனநாயக வழிகளில் போராடியும், குரல் கொடுத்தும் வருகின்றது.

வீதி நாடகங்கள், நாட்டார் பாடல், ஆய்வு மாநாடுகள்மூலம் இது தொடர்பில் கருத்தாடலை ஏற்படுத்திவருகின்றது.
இரம்பொடை ஆர்.பி. தோட்ட மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டபோதுகூட எமது அணியினர் அங்கு நேரில் சென்று, மக்களுக்கு துணை நின்றனர்.

அந்தவகையில் நீலகாமம் தோட்டத்து உறவுகளுக்கும் நிச்சயம் நாம் துணை நிற்போம். அம்மக்களுக்காக நீதிகோரியும், ஒட்டுமொத்த மலையக தமிழர்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் இடம்பெறும் போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவை வழங்குகின்றோம்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கும்போது, அடியாட்களை வைத்து சட்டத்தை அமுல்படுத்த முற்படுகின்றமை ஆபத்தாகும். இத்தகையை அணுகுமுறைகள், அடாவடிகள் நிறுத்தப்பட வேண்டும்.” என்றுள்ளது.

Related Articles

Latest Articles