மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட் தோட்டத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதல் நிகழ்வாக, சிவனு லெச்சுமணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் செவ்வஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கு நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
பிரதான ஈகைச்சுடரை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் மற்றும் லெச்சுமணனின் சகோதரி சிவனு ராஜகுமாரி ஆகியோர் இணைந்து ஏற்றினர்.
தொடர்ந்து மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம், கல்வியலாளர் சிவ.இராஜேந்திரன், சுயசக்தி நிறுவனத்தின் நிறுவனர் அழகர் செல்வராஜ், சிவனு லெச்சுமணன் நினைவுக்குழு இணைப்பாளர் ப.திருச்செல்வம், பிரதேசசபை உறுப்பினரும் “ஜனநாயகத்திற்கான மக்கள் குரல்” அமைப்பின் உறுப்பினருமான சுரேஸ்குமார், ‘புரடெக்’ தொழிற்சங்க இணைப்பாளர் மைதிலி, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கொட்டகலை கிளை தலைவர் கமல் மற்றும் டெவன் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் ஈகைச்சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு யோக்ஷ்போர்ட் தோட்டத்தில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார். கல்வியலாளர் சிவ.இராஜேந்திரன் “என்ன நினைத்தாய் லெச்சுமணா?” என்ற எழுச்சிப் பாடலைப் பாடினார்.
அழகர் செல்வராஜ், பிரதேசசபை உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன், கே.சுரேஸ்குமார், தோட்ட இளைஞர் உள்ளிட்ட பலரும் நினைவுரைகளை நிகழ்த்தி மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
