“கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம்”

‘டித்வா’ நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்

 அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்

 கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் – சட்டக் கட்டமைப்பிற்குள் நின்று மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம்

 நீண்டகாலப் பிரச்சினையான கலேவெல – மாத்தளை வீதி நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துங்கள்

– மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்

 ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் 25,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கொடுப்பனவுகள் மாத்தளை மாவட்டத்தில் முழுமையாக வழங்கி வைப்பு.

 மாணவர்களுக்கான 15,000 ரூபா மற்றும் 10,000 ரூபா கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

 மதிப்பீடின்றி நஷ்டஈடு வழங்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் நஷ்டஈடு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

‘டித்வா’ சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருட இறுதிக்குள் அந்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதிகாரம், செல்வம் மற்றும் அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத கலாசாரத்தை மாற்றி, அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் புதிய கலாசாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதை பெரும் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கச் சிலர் முயற்சிப்பதாகவும், ஒரு நாகரீகமான நாட்டை உருவாக்குவதற்காக அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் சமூகத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சட்டமானது அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டக் கட்டமைப்பிற்குள் நின்றுகொண்டு அரசாங்கத்தின் நிதியை மிகவும் திட்டமிட்ட முறையிலும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முழு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கொடுப்பனவுகள் மற்றும் மாணவர்களுக்கான 15,000 ரூபா மற்றும் 10,000 ரூபா கொடுப்பனவுகள் மாத்தளை மாவட்டத்தில் தற்போது முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 254 வீடுகள் முழுமையாகவும், 3,829 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மதிப்பீடின்றி நஷ்டஈடு வழங்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் தற்போது நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய வீடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணி உரிமை இல்லாமை, அதிக அபாயமுள்ள பிரதேசங்களில் அமைந்திருத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் போன்ற காரணங்களால் எழுந்துள்ள சிக்கல்களுக்கு வழங்கக்கூடிய மாற்றுத் தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக நிலவும் அளவுகோள்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டஈடு, அதிக அபாய நிலை காரணமாக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள், வீட்டு வாடகைக் கொடுப்பனவு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வீடுகளை நிர்மாணித்தல், காணிகளை கையகப்படுத்துதல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

அதிக அபாயமான பிரதேசங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சட்டங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதோடு, அவர்களை விரைவாக வேறு இடங்களில் குடியேற்றுவதை பிரதானமான பணியாகக் கருதுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல், சூறாவளியினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பது மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது குறித்து வினவிய ஜனாதிபதி, அந்த ஒவ்வொரு பிள்ளைக்காகவும் தனித்தனியான திட்டங்களைத் தயாரித்து மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்டத்தின் பாடசாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. பாடசாலைகளை மீள நிர்மாணிப்பதற்காக கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு இணங்க, அதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பதன் அவசியத்தையும் பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த மாத்தளை மாவட்ட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார். மாவட்டத்தில் 16 பிரதான வீதிகளும் (A மற்றும் B தர வீதிகள்) 02 பாலங்களும் சேதமடைந்திருந்தன. இதில் 16 வீதிகளும் ஒரு பாலமும் தற்போது நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியுள்ள மொரகஹகந்த பாலத்தை நிரந்தரப் பாலமாக துரிதமாக நிர்மாணிப்பது குறித்தும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது.

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரிவர்ஸ்டன் வீதி மற்றும் நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் கலேவெல – மாத்தளை வீதி நிர்மாணப் பணிகள் குறித்து வினவிய ஜனாதிபதி, அவற்றை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் நீர் வழங்கல் திட்டங்களைச் சீரமைப்பதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. கைத்தொழில் அமைச்சின் கீழ் நஷ்டஈடு வழங்கும் போது, சேவைத் துறையில் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள், சுற்றுலாத் துறை மற்றும் சுரங்கத் துறையினருக்கு நஷ்டஈடு வழங்கும் செயல்முறை மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தித் துறையை வழமைக்குக் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய ஜனாதிபதி, உற்பத்திப் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு கிராமிய விவசாயத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாத்தளை நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றி அதன் பயன்களை மக்களுக்கு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, பிரதேச சபை தலைவர்கள், உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, மாத்தளை மாவட்ட செயலாளர் எல்.பி. மதநாயக்க உள்ளிட்ட தொடர்புள்ள திணைக்களங்களின் பிரதானிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles