ஹட்டனில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல்வேறு இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.

ஹட்டன் பகுதியில் இன்று (12) பிற்பகல் 2.00 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மழையுடன் கூடிய கடும் மூடுபனி நிலவுவதால், பின்வரும் வீதிகளைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீண்டும் சரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, மலையக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மாலை வேளைகளில் பெய்து வரும் மழையினால் விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களும், அன்றாடக் கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதார ரீதியாகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஹட்டன் பகுதியில் கழிவுகள் முறையாக அகற்றப்படாத காரணத்தினால், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, மழை நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடி குறுக்கு வீதிகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியும் இதுவரை முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை எனவும், இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மலைவாஞ்சான்

Related Articles

Latest Articles