‘உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி’

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் உயிரைக் காத்து நின்ற ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மே 12 முதல் 18 வரையான காலப்பகுதி முள்ளிவாய்க்கால் வாரமாகத் தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதிப் போரின் போது உணவின்றித் தவித்த மக்கள், உப்பும் அரிசியும் கலந்த கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த அந்தத் துயரமான நாட்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரதூரமான யுத்த வடுக்களைச் சுமந்த மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர். சந்நிதி ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாரம்பரிய முறைப்படி சிரட்டைகளில் கஞ்சி வழங்கப்பட்டது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து பொதுமக்களுக்குக் கஞ்சியைப் பரிமாறினர்.

கஞ்சியை வாங்கி உண்ட மக்கள், முள்ளிவாய்க்கால் மண்ணில் கஞ்சிக்கும் வழியின்றித் தவித்த தமது உறவுகளின் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சந்நிதி முருகனின் சந்நிதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

Related Articles

Latest Articles