“மாகாண சபை தேர்தல் தாமதமாவது சட்டக்குளறுபடிகள் காரணமாகவே என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அத்தகைய சட்டக் குளறுபடிகள் இருப்பதை நன்கு அறிந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி தாம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்துக்குள்ளாக மாகாண சபை தேர்தலை நடாத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
எனவே, நிலவுகின்ற சட்டச் சிக்கல்களை நிவர்த்தி செய்து மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தும் பொறுப்பு தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்துக்கு உண்டு.” என மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
நீதியும் நியாயமுமான தேர்தல்களை கண்காணிப்பதற்கான அமைப்பான ‘பவ்ரல்” ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
” சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஏதேனும் தேசிய முக்கியத்துவம் சார்ந்த விடயங்களில் அரசியல் கட்சிகளை அழைத்து பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பவ்ரல் போன்ற அமைப்புகள் கடந்த காலம் முழுவதும் செயற்பட்டு வந்துள்ளன.
அத்தகைய அனைத்துக் கட்சி கலந்துரையாடல்களில் மிக அரிதாகவே மக்கள் விடுதலை முன்னணி கலந்து கொள்ளும். இருந்த போதும் தேசிய மக்கள் சக்தியாக உருவெடுத்த பின்னர் அதில் மாற்றம் தெரிகிறது. இன்றைய கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் ஜெயசிங் முழுமையாக கலந்து கொண்டு ஏனைய கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
இந்தக் கருத்துக்களை தமது அரசியல் கூட்டணிக்கு எடுத்துச் சென்று அவர்களின் தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு ஆளும் கட்சி என்ற வகையில் எடுக்க உந்துதல் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி யுடன் எதிர்க்கட்சிகளாக பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சகதி, இலங்கை தமிழரசு கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முறபோக்கு கூட்டணி போன்ற கட்சிகளும், பாராளுமன்றத்துக்கு வெளியே செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மலையக அரசியல் அரங்கம், அகில இலங்கை தமிழர் மகா சபை, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஐக்கிய இடதுசாரி முன்னணி முதலான சிறு கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடலாக அமைந்தது.
