பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் நேற்று (07.07.2026) இந்த அட்டை கையளிக்கப்பட்டது.
கடந்த 2026 ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனால் அறிவிக்கப்பட்ட OCI நடைமுறை எளிமைப்படுத்தலின் கீழ், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் (IOT) OCI அட்டைக்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது.
இந்த புதிய தகுதி மாற்றத்தின் கீழ் இலங்கையில் வழங்கப்படும் முதலாவது OCI அட்டை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகமானது e-OCI சேவை
இச்சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள e-OCI சேவையையும் உயர்ஸ்தானிகர், பிரதி அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய e-OCI சேவை மூலம், அட்டைதாரர்கள் தங்களது திறன்பேசியில் (Smartphone) டிஜிட்டல் அட்டையைப் பயன்படுத்தி, எவ்வித சிரமமுமின்றி இந்தியாவிற்கு எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
இந்த புதிய நடைமுறைகள் இலங்கை மற்றும் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையிலான உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.










