மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாளை (09) சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat index) எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளது.

காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து மனித உடல் வானிலையை எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என்பதைக் காட்டும் வெப்பச் சுட்டெண், பகல் வேளையில் அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், கடுமையான வெளி வேலைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும், தொடர்ந்து கடினமாக உழைப்பது தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் போதியளவு நீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பமான நேரங்களில் கடுமையான வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles