பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான முன்மொழிவுகள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெருமவிடம் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.
செந்தில் தொண்டமான் ஊவா மாகாண கல்வி அமைச்சராக இருந்த போது குறித்த பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அடித்தளத்தை போட்டிருந்ததுடன், அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு தேவையான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்திருந்தார்.
அதன்பின்னர் குறித்த ஆவணங்கள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலமாக கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு, குறித்த 10 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் பதுளை மாவட்டத்தில் குறித்த 10 தமிழ் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஒரே தடவையில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதை ஊவா மாகாண தமிழ்க் கல்விச் சமூகம் பாராட்டியுள்ளது.