எல் நினோ தாக்கம்: ஒக்டோபரில் அடை மழை – வெள்ளப்பெருக்கு ஆபத்து!

தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இக்காலகட்டத்தில் பருவகால சராசரியை விட அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வானிலை நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விஜேமான்ன, இலங்கையின் வருடாந்த மழைவீழ்ச்சியில் சுமார் 30% அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே பதிவாகுவதாகக் கூறினார்.

வழக்கமான அளவை விட மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில், நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்பதால் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்காக கண்டிப்பான முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று அர்த்தமில்லை, ஆனால் அப்படி ஒரு சூழல் உருவானால் அதை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles