இரட்டை சதமடித்து ஜோ ரூட் சாதனை – வலுவான நிலையில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று ஆரம்பமானது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் மட்டுமின்றி களத்தடுப்பிலும் ஏமாற்றமளித்தனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். சேப்பாக்கம் ஆடுகளம் இன்றும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து அணியினர் ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். கேப்டன் ஜோ ரூட்டும் தன் பங்குக்கு 150 ஓட்டங்களை கடந்தார். பின்னர் 2 ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்கு பிறகும் விரைவாக ஓட்டங்கள் எடுத்த ஸ்டோக்ஸ், நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 195 ரன்களில் இருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து இரட்டை சதம் எடுத்தார்.

341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இது ஜோ ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டை சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டை சதம். 100-வது டெஸ்டில் இரட்டை சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

எனினும் நதீம் வீசிய பந்தில் ரூட் 377 பந்துகள் (218 ரன்கள் 19 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். ஸ்டோக்ஸ் (82), போப் (34), ஜோஸ் பட்லர் (30) மற்றும் ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பெஸ் (28) மற்றும் லீச் (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த், பும்ரா, அஸ்வின் மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.2வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 180 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் குவித்துள்ளது.

Related Articles

Latest Articles