திகா அணியின் சிவனேசனுக்கு காங்கிரஸின் சகாதேவன் பதிலடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை, அமரர் ஆறுமுகன் தொண்டமான் தான் ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில், இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ளதென்றே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்திருந்தார் என்று   ஹப்புத்தளை பிரதேச சபையின் உறுப்பினர் கலை சகாதேவன் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் விடயத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமான்  கனவு கண்டார் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவனேசன் கூறுவதைப் போன்றதொரு அறிக்கையை, செந்தில் தொண்டமான்   வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவனேசன் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் பதலளித்துள்ள கலை சகாதேவன், கூறியவை வருமாறு,

ஆயிரம் ரூபாய் விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள யோசனை வெற்றியடைந்த விவகாரம், சிறு பிள்ளைக்குக்கூட தெரிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அது பற்றித் தாங்கள் அறிந்திராதிருப்பது, உங்களுடைய அரசியல் அறியாமையையே எடுத்துக்காட்டுகின்றது.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க மறுப்புத் தெரிவித்து வரும் கம்பனிகளைக் கேள்வி கேட்க, தொழிலாளர்களிடமிருந்து சந்தா பெற்றுக்கொள்ளும் அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, நீங்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரும் கேள்வி கேட்டு, மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமையையும் பொறுப்பையும் கொண்டுள்ளீர்கள் என்பதை, நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

13 நாள்கள் மாத்திரமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை. அந்த விடயம் தொடர்பில், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ்தான், ஊடகங்களிடமும் நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தார்.

அவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டுச்சென்று 15 வருடங்களுக்கும் மேலாகின்ற நிலையில், அவரை இன்னமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினராக நீங்கள் நினைத்துக்கொடிருப்பது, உங்கள் அரசியல் அறியாமையையே மேலும் புடம்போட்டுக் காட்டியிருக்கின்றது.

தாங்கள் கூறியதுபோல், பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முறையாகப் பேச்சார்த்தை நடத்த முடியவில்லை என்று நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்பில், ஜனாதிபதியிடம் கலந்துரையாடவோ பெருந்தோட்டக் கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது ஊடகங்களுக்கு முறையாக அறிக்கையிடவோ செந்தில் தொண்டமான் அவர்களால் முடியும். ஆனால், உங்கள் கட்சியின் தலைவர் பழனி திகாம்பரத்தைப் போன்று ஓடி ஒளிந்துகொண்டுந்து, அல்லைக்கைகளை வைத்துக்கொண்டு அவர் அரசியல் செய்பவரல்ல.

எவ்வாறாயினும், எமது கட்சியின் சார்பில் விடுக்கப்படும் அறிக்கைகள், தங்களுடைய அரசியல் ஞானத்துக்கு எட்டவில்லையென்றால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் பயிற்சி பெற்று வெளியேறி, தற்போது உங்கள் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம், எமது கட்சிஅறிக்கைகளின் உள்ளடக்கங்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு பதில் அறிக்கைகளைத் தயாரிப்பதே சிறந்ததாகும்” என, தவிசாளர் கலை சகாதேவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles