ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை 1996இல் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், 1996 உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பங்குபற்றுகின்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, யாழ்ப்பாண அணிக்கு எதிராக இந்தத் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நோக்கில், இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட ஐவர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கடந்த வருடம் குறித்த தொடரில் விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், உபுல் சந்தன மற்றும் மார்வன் அத்தபத்து உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸல் ஆனோல்ட், நுவன் குலசேகர மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய வீரர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள வீதியோர பாதுகாப்பு உலக இருபதுக்கு -20 போட்டியில் இணைந்து கொள்ளவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1996 உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் விசேட வைபவமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.