பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா வழங்குவதற்கு தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கனவாகவும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் விடா முயற்சியும் சாணக்கியத் தன்மையின் வெளிப்பாடாகுமென இ.தொ.காவின் உபசெயலாளரும் பிரஜாசக்தி பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அமரர் ஆறுமுகன் தொண்டமான் மக்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்று கொடுப்பதற்கு கோரிக்கை முன்வைத்து அதனையே குறிக்கோளாகவும் இறுதி கோரிக்கையாகவும் முன்வைத்திருந்தார். அவர் துரதிஷ்ட வசமாக எம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அவருடைய வழியில் எங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் விடா முயற்சி மற்றும் மக்களின் பலத்தாலும் பல சவால்களைத் தாண்டி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த காலங்களில் எங்களுடைய மக்கள் பல கோணங்களிலும் அப்போதைய அரசாங்கத்தினால் தவறி வழிநடத்தப்படிருந்தாலும் கூட எங்களுடைய அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டு கோளுக்கிற்கிணங்க நாங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பெரும் வெற்றியாகும்.
நாங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டும். 80 வருட பழைமையான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் பல உரிமைகளை வென்று கொடுத்துள்ளது. மேலும், அவர்களின் நில உரிமைகளை பெற்றுக் கொடுக்க முன்னின்று செயற்படுவோம். சிலர் இந்த ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது போனமையினால் மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பார்கள் ஆனால் மக்கள் தெளிவாக சிந்தித்து அவர்களை நிராகரித்து விட்டனர். எம் மீது நம்பிக்கை வைத்தனர் என்றும் மக்களுக்கு நம்பிக்கைக்கு ஏற்ப இருப்போம் என குறிப்பிட்டதோடு ஆயிரம் ரூபாய் வழங்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.