நிதி அமைச்சர் பஸிலுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து

நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான்  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செந்தில் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த பசில் ராஜபக்ச, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அக்காலப்பகுதியில், மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் சரியாகவும் முறையாகவும் முன்னெடுத்தவர்கள் என்ற பெருமை, பஸில் ராஜபக்சவுக்கு உண்டு.

அத்துடன் நின்றுவிடாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னரும், பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்து, மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வந்தார்.

தவிர, நாட்டில் வியாபித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்தது மாத்திரமன்றி, கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், பஸில் ராஜபக்சவின் அரசியல் மீள் பிரவேசம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது” என, செந்தில் தொண்டமான் அவர்கள், அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles