மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ் லீக் தோட்டத்தில் நேற்றைய தினம் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் Covid 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்றது.
இதன்போது ஏராளமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு குறித்த மத்திய நிலையத்திற்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
சுகாதார தரப்பினர் பல்வேறு வகையிலும் பல சந்தர்ப்பங்களிலும் தடுப்பூசியை வழங்கல் வந்திருந்த பொதுமக்களுக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தொடர்ச்சியான அறிவித்தல்களை வழங்கிய போதிலும் மக்கள் அதனை செவி சாய்க்காது செயற்பட்டமை குறித்து பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சமூக இடைவெளியை பெறாத நிலையில் நெருக்கமாக நின்றுகொண்டு தடுப்பூசிகள் காத்திருந்த தொடர்பில் பல விமர்சனங்கள் எழுகின்றன .
சகலருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி முன்னெடுத்து இருந்த போதிலும் பொதுமக்களின் அலட்சிய போக்கின் காரணமாக மேலும் துரிதமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பலரும் அச்சம் வெளியிடுகின்றனர்.
பொதுமக்களின் பொறுப்பற்ற அசமந்த செயற்பாடுகள் காரணமாக மஸ்கெலியா பகுதியில் ஏற்கனவே தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் மரணங்களும் சம்பவித்து வந்துள்ளன .
இவ்வாறான நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகும் பட்சத்தில் மஸ்கெலியா பிரதேசம் covid-19 தொற்றினால் அதிகம் பாதிப்புறும் பிரதேசமாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி இவ்வாறு செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சுகாதார தரப்பினர் மாத்திரமன்று போலீசாரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான தனிமைப்படுத்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மலையகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சிறப்பாக நடைபெற்று வருகின்ற போதிலும் கூட இவ்வாறான ஒரு சில பகுதிகளில் பொதுமக்களின் அலட்சியப் போக்கினால் பாரிய விளைவுகளை மலையகம் சந்திப்பதை சந்திக்கப் போவதை தடுக்க முடியாது என்பது உண்மை.
கௌசல்யா சுரேஷ்