கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்றைய தினம் (14) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இந்திய தூதரகம் மீது குழுவொன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தூதரக அதிகாரி ஒருவருக்கு சந்தேக நபர், தகவலொன்றை அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு – கொள்ளுபிட்டி போலீஸ் நிலையத்தில், இந்திய தூதரக அதிகாரிகள் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
அதன்பேரில் விசாரணைகளை ஆரம்பித்த கொள்ளுபிட்டி போலீஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
செய்தி இணையதளத்தில் பணியாற்றியவர்
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கண்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் கடமையாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் எதற்காக இவ்வாறான தகவலொன்றை அனுப்பியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் எதற்காக இவ்வாறான தகவலொன்றை அனுப்பினார் என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏதேனும் தகவல் கிடைத்தால், அது குறித்து முதலில் போலீஸார் அல்லது இராணுவத்திடமே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விமானப்படை பதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2004ம் ஆண்டு விமானப்படையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.
குறித்த சந்தேக நபர் விமானப்படையில் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றவில்லை எனவும் விமானப்படை கூறுகின்றது.
1997ம் ஆண்டு விமானப்படையில் இணைந்த கீர்த்தி ரத்நாயக்க, முறையற்ற விதத்தில் நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2004ம் ஆண்டு விமானப்படையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் விமானப்படை தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி போலீஸாருடன் இணைந்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.