‘கொரோனா பரவல்’ -மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் பொறிமுறை தொடர்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் கூட்ட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ உலக நாடுகள் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு தொற்று நிலைமையை எதிர்கொள்ளவில்லை. இதனால்தான் இன்று அனைத்து நாடுகளிலும் சுகாதாரத்துறைசார் வளப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்நிலையில் இருந்து மீள்வது குறித்து சிந்திக்க வேண்டும்.

நாட்டில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகள் நிரம்பிவழிகின்றன. தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் நடைமுறையும் ஆரம்பமாகியுள்ளது.

எனினும், வீடுகளில் இருக்கும் தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். இதற்கு எதிரணியும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

அதேவேளை, மக்களுக்கு இன்று உயிர் தொடர்பான உச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பீதியை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் மக்கள் உளரீதியில் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட வேண்டும். அதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் மேலதிக உதவிகளை பெறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல சுகாதார துறையினரை மேலும் பலப்படுத்த வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதற்கான நம்பிக்கையை வழங்க வேண்டும்.

தற்போதைய பிரச்சினை தேசியப் பிரச்சினையாகும். அதிலிருந்து நாட்டை மீட்பதற்கு, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும், அரசில் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles