T- 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியானது!

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில், இலங்கை அணியானது, நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை, நேற்று (17) அறிவித்துள்ளது. தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் ஒக்டோபர் 17ம் திகதி ஓமானில் ஆரம்பிக்கின்றன.

முதல் சுற்றின் முதல் போட்டியில் பி குழுவின் அணிகளான ஓமான் மற்றும் பபுவா நியூகினியா அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப்போட்டிகள் ஓமானில் நடைபெறவுள்ளன.

இதேவேளை ஏ குழுவுக்கான போட்டிகள் அபுதாபியில் ஒக்டோபர் 18ம் திகதி ஆரம்பிக்கின்றன. குறித்த தினத்தில் அயர்லாந்த அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. மற்றுமொரு போட்டியில் இலங்கை அணியானது, நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அதன் பின்னர் ஒக்டோபர் 20ம் திகதி அயர்லாந்து அணியையும், 22ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்த முதல் சுற்றிலிருந்து, இரண்டு குழுக்களில் இருந்தும் தலா 2 அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.

அந்தவகையில், சுப்பர் 12 சுற்றின் குழு ஒன்றுக்கான போட்டிகள், ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பமாகின்றது.

குழு ஒன்றுக்கான போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளதுடன், அதே தினத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.

குழு ஒன்றுக்கான போட்டிகள், நவம்பர் 6ம் திகதி, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான போட்டிகளுடன் நிறைவுபெறுகின்றது.

தொடர்ந்து குழு 2 இற்கான போட்டிகள் ஒக்டோபர் 24ம் திகதி ஆரம்பமாகின்றன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. குழு 2 இற்கான இறுதிப்போட்டி நவம்பர் 7ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் முதல் சுற்றின், குழு பி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெறும் அணி மோதவுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல் அரையிறுதிப்போட்டி நவம்பர் 10ம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப்போட்டி நவம்பர் 11ம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கும் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஐசிசி 20க்கு 20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி, நவம்பர் 14ம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக 15ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles