இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் இரத்மலானையில் உள்ள பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் 2021 ஆகஸ்ட் 15ஆம் திகதி சிறந்த உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டது.
இக் கொண்டாட்டங்களுக்கு சங்கைக்குரிய கலாநிதி மாபலகம விபுலசார மகா தேரரும் ஏனைய மகா சங்கத்தினரும் தலைமைதாங்கியிருந்தனர்.
இதன்போது, சங்கைக்குரிய கலாநிதி மாபலகம விபுலசார மகா தேரர் அவர்களால் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அத்துடன் இந்திய இலங்கை மக்களின் நல்வாழ்வினை வேண்டி புத்த பெருமானுக்கு விசேட ஆசீர்வாத பூஜை ஒன்றும் அங்கு நடைபெற்றிருந்தது.
2. இச்சந்தர்ப்பத்தில் உரை நிகழ்த்தியிருந்த சங்கைக்குரிய கலாநிதி மாபலகம விபுலசார மகா தேரர் அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆன்மீக உறவுகளை வலுவாக்குவதில் பௌத்தமதம் மிகவும் பலமான பிணைப்பினை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
புத்த பெருமானின் காலம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் ஆழமான தொடர்புகள் இருந்து வருவதையும் அவர் இதன்போது நினைவூட்டினார்.
புராதன காலம் முதல் நவீன காலத்திலும் தொடர்ந்துவரும் இவ்வாறான உறவில் காணப்பட்ட நெருக்கம், அவ்வுறவானது பல்பரிமாண ரீதியிலான மாற்றங்களைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
அத்துடன் இந்திய இலங்கை உறவானது எதிர்காலத்திலும் தொடர்ந்து வலுவடையும் என்ற நம்பிக்கையையும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
3. இப்பிரிவேனாவில் கல்வி கற்று வரும் இந்திய மதகுருமார் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான உரைகளை இங்கு நிகழ்த்தியிருந்ததுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பிணைப்பினை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் அவர்கள் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினருக்கும் ஏனைய பக்தர்களுக்கும் அங்கு அன்பளிப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை இப்பிரிவேனாவில் ஒழுங்கமைத்த சங்கைக்குரிய கலாநிதி விமலசார தேரர் அவர்களுக்கு உயர் ஸ்தானிகர் அவர்கள் தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
2020 செப்டெம்பரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த உறவுகளின் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த நிதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு அரசாங்கங்களும் திட்டமிட்டு வருகின்றன.