மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!

– செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் –

கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய முறைமையை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணத்திட்டத்தில் இவர்களை உள்வாங்காமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் பிரகாரம் முழு நாட்டையும் முடக்கி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடந்த 20ஆம் திகதி இரவுமுதல் அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுத்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த தினத்தில் மதுபானச்சாலைகளில் அதிகளவானவர்கள் குவிந்ததுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களையும் கொள்வனவு செய்து சென்றத்தை காணக்கூடியதாக இருந்தது.

சமூக உணர்வானது ஒருசிலர் மத்தியில் மாத்திரம் ஏற்பட்டு பயனில்லை. இலங்கையில் வாழும் அனைவர் மத்தியிலும் சமூக உணர்வு ஏற்பட்டால் மாத்திரமே கொரோனா தொற்றை முழுமையாக நாட்டிலிருந்து ஒழிக்க முடியும்.

கொவிட் தொற்றால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுப் பொருட்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாது திண்டாடிவரும் சூழலில் இவ்வாறான நபர்களை காணும்போது பெரும் வேதனை ஏற்படுகிறது.

எதிர்காலத்தில் மதுபானசாலைகளில் மதுபானங்களைக் கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பதிவு செய்ய புதிய முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு பதிவுசெய்யப்படும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய நபர்களை அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணத்திட்டத்தில் உள்வாங்க கூடாது.மதுபானம் வாங்க நிதி இருக்கும் இவர்களுக்கு உணவு பொருட்களையும் வாங்க முடியும். எனவே அவர்களுக்கு வழங்கும் நிதியை வாழ்வாதாரத்தை இழந்து,வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மேலதிகமாக வழங்க வேண்டும். இதன் மூலம் உண்மையாக வறுமையிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வாழும் மக்களுக்கு உதவிகளை செய்ய முடியும்” என்றும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles