நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தலைமையிலேயே குறித்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.
” சிறைச்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஆம் திகதி நோயாளி ஒருவரை பரிசோதித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரிஷாட் பதியுதீன் பலவந்தமாக உள்ளே நுழைந்தார். அவரை வெளியில் நிற்குமாறு கூறினேன்.
இதனையடுத்தே ரிஷாட் பதியுதீன் மரண அச்சுறுத்தல் விடுத்தார். எனக்கு தேவையான வைத்தியர் ஒருவரை இங்கு கொண்டுவர முடியும். உம்மை மாற்றவும் முடியும். வேறு உலகுக்கு அனுப்பவும் முடியும். உமக்கு ஆயுள் குறைவு. நீ கவனமாக இருந்துக்கொள்.” – என கடும் ஆவேசத்துடன் ரிஷாட் பதியுதீன் மிரட்டினார் என குறித்த வைத்தியர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலையின் பிரதான வைத்தியரிடமும், அதிகாரியிடமும் சம்பந்தப்பட்ட வைத்தியர் முறையிட்டுள்ளார். அதன்பின்னரே பொரளை பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாகவே சிறைச்சாலை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
