“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும், விஞ்ஞானப்பூர்வமாக நாடு முடக்கப்படவில்லை. மாறாக ‘லொக்டவுன்’ கோரிக்கையை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.” – என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் பயணத்தடை முறையாக அமுல்படுத்தப்படவில்லை. நாட்டிலுள்ள பாதி பேர் தொழிலுக்கு செல்கின்றனர். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நிதி அவசியம், ஆகவே நீங்கள் வேலைசெய்யுங்கள் என அரசும் கூறுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே நாடு முடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை முறையாக நிறைவேற்றப்படவில்லை. மாறாக கோரிக்கை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயே நாடு மூடப்பட்டுள்ளது. இதனை ஏற்கமுடியாது. எனவே, விஞ்ஞானப்பூர்வமாகவே முடக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் விவகாரத்தை பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி முயற்சிக்கின்றது. நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே நாட்டை முடக்கும் கோரிக்கை பங்காளிக்கட்சிகளால் விடுக்கப்பட்டது என்று தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.










